கூடலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பலி
- தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் பாலாஜி(19). இவர் ஈரோட்டில் உள்ள மோட்டார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். சென்னையை சேர்ந்த பாலகுமார் தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியங்குடி பகுதியில் தென்னந்தோப்பு வைத்துள்ளார்.
அந்த தோப்பிற்கு மோட்டார் பொருத்தும் பணிக்காக பாலாஜி மற்றும் பரமேஸ்வரன்(42) , பிரவீன்குமார்(20) ஆகிய 3 பேரும் வந்தனர். கடந்த சில நாட்களாக மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று பணி முடிந்த பின்னர் 3 பேரும் சாப்பிட சென்றனர். பின்னர் பரமேஸ்வரன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் திரும்பினர். ஆனால் பாலாஜி திடீரென மாயமானார்.
இதனால் தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் மீன் வளர்க்கும் தொட்டியில் பாலாஜி தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் மற்றும் கம்பம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பாலாஜியின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.