படமெடுத்து சீறிய நல்ல பாம்பை பார்வையால் மிரட்டி தடுத்த 'லியோ' பூனை
- பூனை வீட்டில் உள்ள அனைவரிடமும் மிகவும் பாசமாக இருந்து வந்தது.
- வளர்ப்பு பூனை லியோவின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தாம்பரம்:
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் தனது எஜமானரை பாதுகாக்க பூனை ஒன்று சீறிய நல்ல பாம்பை தடுத்து நிறுத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம், என்.ஜி.ஓ. நகர் பகுதியை சேர்ந்தவர் பெல்வில். இவர் தனது வீட்டில்செல்லப் பிராணியாக லியோ என்று பெயரிட்ட பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த பூனை வீட்டில் உள்ள அனைவரிடமும் மிகவும் பாசமாக இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தபோது எங்கிருந்தோ வந்த சுமார் 5 அடிநீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று பெல்வில்லின் வீட்டு வளாகத்தில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது. மேலும் அந்த பாம்பு வீட்டிற்குள் செல்ல முயன்றது.
இதனை கவனித்த லியோ பூனை, பாம்பை தடுத்தது. இதனால் நல்லபாம்பு படமெடுத்து ஆடியபடி சீறியது.
ஆனாலும் லியோ பூனை, பாம்பை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்காமல் தனது பார்வையாயே மிரட்டி அங்கேயே நிற்கச் செய்தது. சிறிது நேரத்தில் பெல்வில் அங்கு வந்த போது நல்ல பாம்பை வீரத்துடன் பூனை எதிர்த்து நின்றதை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
இதையடுத்து நல்லபாம்பு குறித்து பாம்புபிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து சீற்றத்துடன் இருந்த நல்லபாம்பை லாவகமாக பிடித்து தாம்பரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். நல்ல பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி தனது உரிமையாளரையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாத்து கெத்து காட்டிய பூனையை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
வளர்ப்பு பூனை லியோவின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.