தமிழ்நாடு

திருப்பத்தூரில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

Published On 2024-06-15 01:58 GMT   |   Update On 2024-06-15 01:58 GMT
  • சில பெற்றோர்கள் பள்ளிக்குள் விரைந்து தங்களது குழந்தையை கட்டித்தழுவி, குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினர்.
  • கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி, அதன் அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என்று அந்த பகுதி மிகவும் பரபரப்பு நிறைந்தது ஆகும்.

நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஜெயராமன் என்பவரது வீட்டின் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து உள்ளனர்.

அவர்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பரபரப்பான நகர பகுதியில் சிறுத்தை வருவதற்கு வாய்ப்பு இருக்காது, அது காட்டுப்பூனையாக இருக்கலாம் என்றனர். ஆனால் அவர்களின் கணிப்பு தவறு என்பதை போன்று அங்கு ஒரு சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுத்தை வனத்துறையினரிடம் இருந்து தப்பி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மேரி இமாகுலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்து சென்றது. அப்போது அங்கு பள்ளி சுற்றுச்சுவருக்கு பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புத்தகரத்தை சேர்ந்த கோபால் (வயது 55) என்பவரை நெற்றி, காது பகுதியில் சிறுத்தை தாக்கிவிட்டு மறைவான இடத்தில் புகுந்தது.

சிறுத்தை தாக்கியதை அருகில் இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டு பள்ளிக்குள் சிறுத்தை புகுந்து விட்டது, குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் தொற்றியது.

பள்ளி வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்த தகவல் அறிந்து மாணவிகளை வகுப்பறையின் உள்ளே வைத்து ஆசிரியர்கள் பூட்டி பாதுகாத்தனர். சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த கோபாலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

சிறுத்தை பள்ளி வளாகத்தில் இருப்பதால் மாணவிகளை வெளியே அனுப்ப வேண்டாம், கதவுகளை திறக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அருகில் இருந்த பள்ளிகளிலும் எச்சரிக்கையாக இருக்கும்படி தகவல் தெரிவித்தனர். சிறுத்தை புகுந்த தகவல் திருப்பத்தூர் நகர பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் தங்கள் குழந்தைகளின் நிலைமை என்ன ஆனதோ என்ற அச்சத்துடன் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு பதற்றத்துடன் குவிந்தனர்.

இதையடுத்து அங்கு சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை திடீரென 10 அடி உயர சுற்றுச்சுவரை தாண்டி குதித்து அருகே உள்ள கார் நிறுத்தும் பகுதிக்குள் புகுந்தது. சிறுத்தை பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிய தகவல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வகுப்பறை கதவுகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மாணவிகளை பத்திரமாக பெற்றோருடன் அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில பள்ளி குழந்தைகள் பயத்துடன் அழுது கொண்டு ஓடினர். அவர்களுக்கு ஆசிரியர்களும், சக மாணவிகளும் ஆறுதல் கூறினர்.

சில பெற்றோர்கள் பள்ளிக்குள் விரைந்து தங்களது குழந்தையை கட்டித்தழுவி, குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினர். மாலை 5.30 மணிக்கு அனைத்து மாணவிகளும் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது பொதுமக்களும், பெற்றோர்களும் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் புகுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மாணவிகளை பெற்றோருடன் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

பின்னர் கார் நிறுத்தத்தில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் ஈடுபட்டனர்.

கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது. அப்போது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை வனத்திற்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

திருப்பத்தூரில் பெரும் பீதியை ஏற்படுத்திய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியதால் தற்போது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 

Tags:    

Similar News