தமிழ்நாடு

சென்னை ஐகோர்ட்

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவருக்கு ஜாமீன்- ஐகோர்ட் உத்தரவு

Published On 2022-09-02 06:56 GMT   |   Update On 2022-09-02 06:56 GMT
  • பள்ளி கலவர வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபுவை முதல் குற்றவாளியாக சேர்த்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
  • கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபுவை முதல் குற்றவாளியாக அறிவித்து எப்.ஐ.ஆரை திருத்தி பதிவு செய்துள்ளதாக வக்கீல் வாதிட்டார்.

சென்னை:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்த போராட்டம் கலவரமாக மாறி பள்ளியை பொதுமக்களே சூறையாடினர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ், தீயணைப்பு வாகனங்கள், பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது.

இதுகுறித்து சின்னசேலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபுவை முதல் குற்றவாளியாக சேர்த்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரபு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி, மனுதாரர் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட செய்யவில்லை. வாட்ஸ்-அப் குரூப் நிர்வாகியும் இல்லை. வழக்குப்பதிவு செய்யும்போது, அவர் பெயரை குறிப்பிடவில்லை. பின்னர், அவரை முதல் குற்றவாளியாக அறிவித்து எப்.ஐ.ஆரை திருத்தி பதிவு செய்துள்ளனர். இந்த கலவரத்துக்கும், மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாதிட்டார். இதையடுத்து, மனுதாரருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News