தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் டிரோன் மோதியது- 2 பெண் என்ஜினீயர்கள் பிடிபட்டனர்

Published On 2023-06-23 03:29 GMT   |   Update On 2023-06-23 03:29 GMT
  • பெங்களூருவை சேர்ந்த 2 பெண் என்ஜினீயர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர்.
  • கோவிலானது பாதுகாப்பிற்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவிலை சுற்றிலும், மேற்பரப்பிலும் டிரோன் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை:

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலுக்குள், மெட்டல் டிடெக்டர் பரிசோதனை மற்றும் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு வெளியேயும் போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கோவில் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவில் கோபுரத்தின் மேற்பரப்பில் டிரோன் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண் என்ஜினீயர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவிலின் மேற்கு கோபுரம் எதிரே உள்ள கோவிலுக்கான பிர்லா விடுதியில் தங்கியிருந்தனர். நேற்று மதியம் அங்கிருந்தபடி அவர்கள் வைத்திருந்த டிரோனை இயக்கினர்.

அந்த டிரோன் எதிர்பாராத விதமாக மேற்கு கோபுரத்தின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து அந்த டிரோன் பாகங்களை கைப்பற்றினர். பின்னர் அதனை இயக்கிய 2 பெண் என்ஜினீயர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது கோவிலானது பாதுகாப்பிற்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவிலை சுற்றிலும், மேற்பரப்பிலும் டிரோன் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி நீங்கள் எப்படி இயக்கினீர்கள்? போலீசாரிடம் அனுமதி வாங்கி இருக்கிறீர்களா? என அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதற்கு அவர்கள் தங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது எனவும், 4 ஆண்டுகளாக பல்வேறு கோவில்களுக்கு சென்று டிரோன் மூலம் படம் எடுத்து வருவதாகவும், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் டிரோன் இயக்கியபோது அது தவறி விழுந்து நொறுங்கியதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் வைத்திருந்த மடிக்கணினி மற்றும் செல்போன்களில் டிரோன் மூலம் எதுவும் பதிவு செய்துள்ளார்களா? என்று ஆய்வு செய்தனர்.

அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு, எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News