தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி மக்னா யானை பலி

Published On 2024-05-06 08:53 GMT   |   Update On 2024-05-06 09:53 GMT
  • யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிகோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி, ஜவளகிரி போன்ற வனப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்குள்ள யானைகள் கோடை காலங்களில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வருவது வழக்கம்.

இந்நிலையில் தேன்கனிகோட்டை அருகே சந்தனப்பள்ளி கிராமத்திற்கு அடுத்துள்ள ஏரி பகுதியில் நேற்று இரவு மக்னா யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதியை விட்டு கிராமத்திற்கு நுழைந்துள்ளது.

இதையடுத்து அங்குள்ள ஏரியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் யானையின் தும்பிக்கை பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது.

தொடர்ந்து இன்று காலை அந்த பகுதிக்கு வந்த கிராம மக்கள் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தேன்கனிகோட்டை வனச்சரகர் விஜயனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வர வழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு அதே இடத்தில் மக்னா யானை உடலை அடக்கம் செய்ய உள்ளனர்.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழையும் யானைகள் அடிக்கடி மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. மேலும் யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News