தமிழ்நாடு (Tamil Nadu)

மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கியதால் காட்சியளித்த மகிஷாசுரமர்த்தினி கோவில்

Published On 2024-09-23 02:52 GMT   |   Update On 2024-09-23 02:52 GMT
  • பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் துர்கா சிற்பத்துடன் உள்ளது.
  • மாசிமாதத்தில் இந்த கோவில் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதன சின்னங்களில் கடற்கரை கோவில் முக்கியத்துவம் வாய்ந்த உலக பாரம்பரிய நினைவு சின்னமாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீர் கோவில் வரை உட்புகுந்து அரிக்க தொடங்கியதால், கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட தொல்பொருள்துறை இந்த கோவிலின் தென்புறம் முதல் வடபுறம் வரை கடந்த 1984-ம் ஆண்டு கடற்கரையில் பாறைகளை குவித்து பாதுகாப்பு அரண் அமைத்து கடல் நீர் உட்புகாமல் இருக்க பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் கடற்கரை கோவிலின் வடக்கு புறப்பகுதியில் பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் துர்கா சிற்பத்துடன் உள்ளது.

மாசிமகத்தன்று கடற்கரையில் குவியும் பழங்குடி இருளர் இனமக்கள் அப்போது காலநிலை மாறி, கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலில் முழங்கால் கடல் நீரில் நடந்து சென்று அங்கு உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர். குறிப்பாக மாசிமாதத்தில் இந்த கோவில் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரை கோவிலுக்கு கற்கள் குவித்து பாதுகாப்பு தடுப்பு அரண் அமைக்கப்பட்டபோது, இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை சிற்பத்தை சேர்த்து பாதுகாப்பு கற்கள் அமைக்காமல் வெளியே அப்படியே விட்டுவிட்டனர். தற்போது இந்த கோவிலை குறிப்பிட்ட சில மாதங்கள் கடல்நீர் சூழ்வதும், குறிப்பிட்ட சில மாதங்கள் கடல் உள்வாங்குவதும் நடைபெறும். தற்போது கடல் உள்வாங்கியதன் மூலம் மகிஷாசுரமர்த்தினி கோவில் முழுமையாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

பல்லவர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டு, முற்றுபெறாத துர்கா சிற்பத்துடன் உள்ள புராதன சின்னமான மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய கலாசார துறையின் கீழ் உள்ள இந்திய தொல்பொருள் துறை நிர்வாகம் கடற்கரை கோவிலை பாதுகாப்பு அரணாக கற்கள் கொட்டி பாதுகாக்கப்படுவதுபோல் மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலையும் கற்கள் கொட்டி பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் தொல்பொருள் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News