ஜப்பான் ஆசிய விளையாட்டு போட்டி- 'சர்பிங்'-ல் மாமல்லபுரம் மாணவி தேர்வு
- மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.
- ஆசியன் சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மீனவர் பகுதி ஒத்தவாடை தெருவை சேர்ந்த சுகந்தி என்பவரின் மகள் கமலி (வயது 14). இவர் மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகி றார்.
மீனவர் குடும்பத்தை சேர்ந்த இவர் தனது மாமா கடலில் சர்பிங் செய்வதை பார்த்து வளர்ந்ததால், அதன்மீது ஆர்வம் ஏற்பட்டு 2வயது முதலே சர்பிங் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சி எடுக்க துவங்கினார்.
தொடர்ந்து வயது வாரியான பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் மாலத்தீவில் நடந்த ஆசியன் சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 4 சுற்றுவரை முன்னேறி, இந்தியா சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தொடர்ந்து ஜப்பானில் 2026ம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 4- ஆம் தேதி வரை16நாட்கள் நடைபெற உள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று விளையாடவும் தகுதி பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் முதன், முதலாக சர்பிங் போட்டி இடம் பெற்றுள்ள நிலையில், ஆசிய அளவிலான அந்த போட்டியில் பங்கேற்க செல்ல இருக்கும் மாமல்லபுரம் பள்ளி மாணவி கமலிக்கு அவர் படிக்கும் பள்ளியின் சார்பில் பள்ளி தாளாளர் பிரான்சிஸ், தலைமை ஆசிரியை பிருந்தா ஆகியோர் சிறப்பு செய்து, பரிசுத்தொகை வழங்க ஏற்பாடு செய்தனர்.
மாமல்லபுரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்செல்லி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சந்தனமாலை, கிரீடம் அணிவித்து கவுரவித்தனர்.