தமிழ்நாடு

மண்டல பூஜை தொடக்கம்: ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் மாலை அணிய சிறப்பு ஏற்பாடுகள்

Published On 2023-11-16 09:02 GMT   |   Update On 2023-11-16 09:02 GMT
  • 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.
  • ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம்.

சென்னை:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது. நாளை (கார்த்திகை 1) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.

இந்த காலத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்வார்கள்.

மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு செல்பவர்கள் பம்பை வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கிருந்து சின்னப் பாதை எனப்படும் நீலிமலை வழியாக கால்நடையாக அய்யப்பன் சன்னிதானம் செல்வார்கள்.

மகரவிளக்கு காலத்தில் செல்லும் பக்தர்களில் பலர் எரிமேலி வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கு பேட்டை துள்ளிவிட்டு அடர்ந்த காட்டுப் பகுதியான பெருவழி பாதையில் நடந்து செல்வார்கள். பேரூர்தோடு, காளைகட்டி, அழுதாமலை, கல்லிடும் குன்றம், கரிமலை, பெரியானை வட்டம் வழியாக பம்பை சென்றடைவார்கள் அங்கிருந்து நீலிமலை வழியாக சன்னிதானம் செல்வார்கள்.

நாளை விரதத்தை தொடங்கும் அய்யப்ப பக்தர்கள் அதிகாலையில் துளசி மாலை அணிவார்கள். அன்றாட வாழ்வியலில் இருந்து மாறுபட்டு துறவு வாழ்க்கை போல் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி கொள்வார்கள். கருப்பு, நீலம், காவி ஆடைகள் அணிந்து, காலில் செருப்பு அணியாமல் இருப்பார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்து சரணம் சொல்லி பூஜை செய்வார்கள்.

விரத காலம் முழுவதும் உணவு கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். புனிதமான மாலை அணியும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் உள்ள முக்கியமான அய்யப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோடம்பாக்கம் மகாலிங்க புரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மாலை அணிவார்கள். கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் மாலை அணிந்ததாகவும் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று கருதுவதால் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்கள்.

அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கிறது. அதுமுதல் மாலை அணியலாம். கோவிலிலேயே மாலை மற்றும் நீலவேஷ்டிகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். டிக்கெட் கட்டணமாக ரூ.10 வசூலிக்கிறார்கள்.

ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம். டிக்கெட் கட்டணம் ரூ.10 செலுத்தி மாலை அணிந்து கொள்ளலாம். மாலை, வேட்டிகள் விற்பனைக்காக தனியாக கடைகள் உள்ளன.

மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளது. மாலை அணிந்து இருமுடி கட்டி செல்பவர்கள் மட்டும் படிகள் வழியாக ஏறி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று சுத்தி பூஜை நடந்தது. நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். இங்கும், மாலை, வேஷ்டி, விற்பனைக்கு உள்ளது. அர்ச்சனை கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பறை எடுப்பு (நெல் அளப்பது) நடைபெறுகிறது. ஊர்வலமாக அய்யப்பா நகர் தெருவில் அழைக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று நெல் அளப்பார்கள்.

மாலையில் படி பூஜை நடக்கிறது. தொடர்ந்து 18 நாட்கள் படி பூஜை நடக்கிறது.

மேடவாக்கம் அருகில் உள்ள வெள்ளக்கல்லில் 18 படியுடன் கூடிய அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். தினமும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறுவது போல் பூஜைகள் நடைபெறும்.

திருவொற்றியூர் ஹைரோடு டோல்கேட் அருகே வடசென்னை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாளை காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் முடிந்ததும் அய்யப்பனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மணலி, காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து கொள்வார்கள்.

அண்ணாநகர் அய்யப்பன் கோவில் நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. உடனே பக்தர்கள் மாலை அணிய தொடங்குவார்கள் என்றனர்.

இந்த அய்யப்பன் கோவில்கள் அனைத்திலும் மாலை அணிவதோடு, மாலை அணிந்த பக்தர்கள் இருமுடி கட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News