தமிழ்நாடு

கோவை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரங்கநாயகி

Published On 2024-08-06 05:58 GMT   |   Update On 2024-08-06 06:08 GMT
  • புதிய மேயரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடந்தது.
  • மேயர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும் புறக்கணித்தனர்.

கோவை:

கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 96 பேர் உள்ளனர். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள். ஒருவர் சுயேச்சை கவுன்சிலர் ஆவார்.

கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா பதவி வகித்து வந்தார். கடந்த 2¼ ஆண்டுகளாக மேயராக இருந்த அவர் கடந்த மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் தலைமையில் கோவையில் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தி.மு.க. மேயர் வேட்பாளராக 29-வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே புதிய மேயரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடந்தது. இன்று காலை 10.30 மணிக்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் கூடியது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் தலைமையில் மறைமுகத் தேர்தல் நடந்தது.

தி.மு.க. மேயர் வேட்பாளரான ரங்கநாயகி தனது வேட்பு மனுவை சமர்ப்பித்தார். வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் முடியும் வரை தேர்தல் அதிகாரி சிவகுருபிரபாகரன் காத்திருந்தார்.

அதன்பிறகு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி, புதிய மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையாளர் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேயர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும் புறக்கணித்தனர். 

Tags:    

Similar News