அரச்சலூர் பேரூராட்சி அலுவலகத்தில் ம.தி.மு.க. பெண் துணைத்தலைவர் 9 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம்
- அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- பெண் துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 11 வார்டுகளில் தி.மு.க. கவுன்சிலர்களும், ஒரு வார்டில் அ.தி.மு.க. கவுன்சிலரும், 2 சுயேச்சைகளும், ஒரு வார்டில் ம.தி.மு.க. கவுன்சிலரும் உள்ளனர்.
இந்த பேரூராட்சியின் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உள்ளார். துணைத்தலைவராக ம.தி.மு.க.வை சேர்ந்த துளசிமணி என்பவர் உள்ளார்.
இவர் பேரூராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் எந்த ஒரு கணக்கு வழக்குகளையும் தன்னிடம் காட்டவில்லை என்றும், குறிப்பாக மினிட் நோட், பில் புக், தினசரி வருகை பதிவு போன்றவை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறி வந்தார்.
இதை கண்டித்து துணைத்தலைவர் துளசிமணி நேற்று காலை 11 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தெரிய வந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன், துணைத்தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனாலும் இதில் சமரசம் அடையாத துளசிமணி தொடர்ந்து உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தெரிய வந்ததும் அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. ஜெயபாலன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இரவு 8 மணி அளவில் துணைத்தலைவர் துளசிமணி உள்ளிருப்பு போராட்டத்தை முடித்தார்.
பெண் துணைத்தலைவர் 9 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.