மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடியை தொட்டது
- கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 123.25 அடியாக இருந்தது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த 2 அணைகளும் நிரம்பியதை அடுத்து உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 70ஆயிரம் கனஅடிக்கு மேல் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் வயநாடு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது.
கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 123.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33ஆயிரத்து 241 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 11ஆயிரத்து 852 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 18ஆயிரத்து 147 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 25ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 அணைகளில் இருந்தும் நேற்று 50ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 43ஆயிரத்து 147 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1 வார காலமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
இதன் காரணமாக வெளியே தெரிந்த நந்தி, கிறிஸ்துவ சிலைகள் தண்ணீரில் மூழ்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 69ஆயிரத்து 117 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 60ஆயிரத்து 771 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 49.12 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
அணைக்கு இதே அளவில் நீர்வரத்து இருந்தால் விரைவில் 100 அடியை தொட்டுவிடும். தற்போது அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.