தமிழ்நாடு

ஆந்திரா தடுப்பணை கட்ட முயற்சித்தால் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்- அமைச்சர் துரைமுருகன்

Published On 2024-07-12 03:19 GMT   |   Update On 2024-07-12 03:19 GMT
  • ஏரிகளில் இலவசமாக களிமண் மற்றும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
  • காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

காட்பாடி:

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா சேவூர் கிராமத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏரிகளில் இலவசமாக களிமண் மற்றும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் தேக்கப்படும். மேலும் ஏரி மற்றும் குளங்களில் மண் எடுக்கும் போது ஆங்காங்கே எடுக்க விடாமல் அதை முறைப்படி எடுக்க அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மண் எடுப்பவரும், விவசாயிகளும் பயனடைவார்கள்.

கிரானைட் முறைகேடு தொடர்பாக அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தற்போது தான் அந்த அறிக்கை எனக்கு வந்துள்ளது. படித்துப் பார்த்த பிறகுதான் முறைகேடு குறித்து தெரியவரும்.

ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றபின்னர் முதன்முறையாக குப்பம் தொகுதியில் பேசும்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு முயற்சிகள் மேற்கொண்டால் அதனை தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இதனால் காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் பகுதியில் மழைநீரை தேங்க விடாமல் தடுக்க, ஆங்காங்கே தேங்கி இருக்கும் குப்பைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இது தொடர்பாக எல்லோருமே தான் கேட்டு வருகிறார்கள். அதேபோல தான் மாயாவதியும் கேட்டுள்ளார். கொலைச் சம்பவம் எல்லா நாட்களிலும் எல்லா இடங்களிலும் நடைபெற்று தான் வருகிறது. தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக கொலைகள் நடைபெறுகிறது. இதற்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த பியூஸ்கோயல் கூறியிருந்தது பற்றி கேட்டதற்கு, 'அதெல்லாம் வெளிநாட்டு செய்தி' என தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தார்.

அப்போது டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News