தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2024-06-18 08:02 GMT   |   Update On 2024-06-18 08:02 GMT
  • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
  • அடுத்தகட்டமாக மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தஞ்சாவூா்:

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தூரில் இன்று ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ளது போல் தஞ்சையிலும் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை-புதுக்கோட்டை சாலை திருக்கா னூர்பட்டியில் விபத்து கால அதிதீவிர சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற பல லட்சம் செலவு ஏற்படுவதால் ஏழை மக்களுக்காகவே முதலமைச்சர் உத்தரவுபடி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டது. அடுத்தகட்டமாக மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த மையத்தின் அனுபவங்கள், செயல்பாடுகள் வைத்து அடுத்தகட்டமாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை கிண்டியில் அரசு இயற்கை மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News