செங்கல்பட்டில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது- அமைச்சர் மெய்யநாதன்
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
- தமிழ் நாட்டை சார்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள்.
சென்னை:
அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக, பல்வேறு விளையாட்டுகளுக்காக உலகத்தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் பிரமாண்டமான விளையாட்டு நகரம் அமைக்க சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
இடம் தேர்வு செய்யப்பட்ட பின், விளையாட்டு நகரம் அமைப்பதற்கு உண்டான பணிகள் விரைவில் தொடங்கப்படும். முதற்கட்டமாக 150 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைவதற்கான பணிகள் தொடங்கும். இதன் மூலம், தமிழ் நாட்டை சார்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள். விளையாட்டுத்துறையில் பல்வேறு புதுமையான திட்டங்கள் கொண்டு வர இது உறுதுணையாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.