8½ கோடி மக்கள்தொகை உள்ள தமிழகத்தில் குறையில்லாமல் ஆட்சி நடத்த முடியாது- அமைச்சர் ராஜகண்ணப்பன்
- திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.
- போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே கண்டாங்கி பட்டியில் உள்ள மவுண்ட் லிட்டரா சி.பி.எஸ்.இ. பள்ளியில், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மாநிலங்களுக்கு இடையே தமிழக மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 19 வயதுக்குட்பட்ட 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
இதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். இறுதி நாள் போட்டியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்துகொண்டு பரிசு வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் பல தடைகளை மீறி சிறப்பான மக்களுக்கான ஆட்சி நடத்தி வருகிறார். 8½ கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் குறை இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.
திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தலைமையில் அனைவரும் அணி திரள வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மாணவ விடுதிகளில் உணவு, சமையலறை, கூடுதல் இடவசதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.