கவர்னர்களின் அரசியல் பேச்சு: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கண்டனம்
- பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அரசியல் பேசுவது என்பது அதிகரித்துள்ளது.
- அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கருத்துரிமை உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் மேற்கு மண்டல கழகத்தின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது. அந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க உள்ளார். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை நடைபெற உள்ளது.
50 சட்டமன்றத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கிறார்கள். 7 வருவாய் மாவட்டத்தில் உள்ள கட்சியின் 14 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அரசியல் பேசுவது என்பது அதிகரித்துள்ளது. யார் அதிகம் அரசியல் பேசுவது என்று அவர்களுக்குள் போட்டி நடத்தும் வகையில் கவர்னர்கள் பேசுகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடுநிலையாக இருக்கக்கூடிய கவர்னர்கள் இப்படி இருப்பது கண்டிக்கத்தக்க செயல்.
ஆ.ராசா சனாதனத்தை எதிர்க்கிறார். அவரோடு விவாதிக்க தயார் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது அவர் அரசியலில் ஈடுபடுகிறார் என்பதை காட்டுகிறது. அவர் நிதானம் இழந்து செயல்படுகிறார்.
அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கருத்துரிமை உள்ளது. அதை கருத்தால் எதிர்கொள்ளாமல் உருவ பொம்மையை எரிப்பது, தலையை சீவி விடுவேன் என மிரட்டுவது கண்டனத்துக்குரியது. அதற்கு தகுந்த பாடம் புகட்ட தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது. பீக் ஹவர் கட்டணம் குறித்து மின்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.