போரூர், பெருங்குடி ஏரிகள் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்- சேகர்பாபு அறிவிப்பு
- அண்ணாசாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் உள்ளூர் பகுதி திட்டம் செயல்படுத்தப்படும்.
- சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
சென்னை:
சி.எம். டி.ஏ. மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் பி கே சேகர்பாபு வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னைப் பெருநகர் பகுதியில் 10 பொது நூலகங்கள், அதிவேக இணையம், போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஆகியவை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தப்படும். மேலும் ரூ.30 கோடி செலவில் மூன்று பன்நோக்கு மையம் அமைக்கப்படும். 'சென்னை அங்காடி'ரூ.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை நகரில் வெள்ள அபாயத்தை குறைக்க வெள்ளக்கட்டுப்பாடு வரைபடம் தயாரிக்கப்படும்.
மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம் ரூ,10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். அண்ணாசாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் உள்ளூர் பகுதி திட்டம் செயல்படுத்தப்படும்.
கோயம்பேடு மார்க்கெட் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மேலும் அங்கு மழைநீர் வடிகால் ரூ.15 கோடி செலவிலும், ரூ,7 கோடி செலவில் குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.
சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை பெருநகரத்தில் அமைந்துள்ள 10 சுரங்கப்பாதைகள் ரூ,8 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். ரூ,5 கோடி செலவில் போக்குவரத்து சிக்னல்கள் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவான்மியூர் பஸ் நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். நெமிலிச்சேரியில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள புத்தேரி ஏரியில் மழைக்காலங்களில் வெள்ளநீர் எளிதாக வடிவதற்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கத்தில், உணவருந்தும் இடம் உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய பன்னோக்கு மையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். ஆவடி பஸ் நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். போரூர் ஏரி ரூ.10 கோடியிலும், பெருங்குடி ஏரி ரூ.10 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.