தமிழ்நாடு

இசைக்கு உள்ள குணங்கள் அனைத்தும் கலைஞரிடம் இருந்தது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-01-09 08:35 GMT   |   Update On 2024-01-09 08:35 GMT
  • மனித உணர்வுகளில் இயல்பாய் கலந்திருப்பது கலை.
  • இசை எங்கும் நிறைந்திருப்பதைப் போல, உலகம் முழுவதும் கலைஞர் எங்கும் நிறைந்திருக்கிறார்.

சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, கலைஞர்-கலைஞர் குழு சார்பில் 'இசையாய் கலைஞர்' என்ற நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

கலைஞரின் நூற்றாண்டையொட்டி அரசு ஒரு புறமும் தி.மு.க. இன்னொரு புறமும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்' என்றே பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த மூன்று மாதங்களில், இளைஞர் அணி சார்பில், 15 கலைஞர் நூலகங்களை தமிழ்நாட்டில் உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் திறந்திருக்கிறோம். அதற்கு இளைஞர் அணியினருக்கு இந்த நேரத்தில் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித உணர்வுகளில் இயல்பாய் கலந்திருப்பது கலை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனையும் அறியாமல் ஒரு கலையுணர்வு இருக்கும் என்று சொல்வார்கள். இந்த நிகழ்ச்சிக்கு 'இசையாய் கலைஞர்' என்பது மிகமிக பொருத்தமான தலைப்பு.

எனக்கு இதற்கு முன்பெல்லாம் புத்தகம் படிக்கும் பழக்கமில்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. கோவிட் காலத்தில் எல்லோரும் வீட்டில் அடங்கி இருந்தோம். அப்போதுதான் புத்தகங்கள் அதிகம் வாசித்தேன். இயக்குநர் கரு பழனியப்பன் நிறைய புத்தகங்கள் தந்து வாசிக்கச் சொல்வார்.

கலைஞரின் 90-வது பிறந்தநாளின்போது, கவிப்பேரரசு வைரமுத்துவின் ஏற்பாட்டில் 90 கவிஞர்கள் கலைஞரை சந்தித்து வாழ்த்தினார்கள். அப்போது, யுகபாரதி அவர் எழுதிய 'நேற்றைய காற்று' புத்தகத்தை கலைஞருக்கு பரிசாக கொடுத்தார்.

அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்ட கலைஞர், இது என்ன புத்தகம் என்று கேட்கிறார். பாடலாசிரியர்களை பற்றிய புத்தகம் என்று யுகபாரதி சொல்கிறார்.

உடனே, 'இதில் நானிருக்கிறேனா' என்று கலைஞர் கேட்கிறார். 'நீங்க இல்லாமலா?' என்று பதில் சொல்கிறார் யுகபாரதி.

இசைக்கு என்னென்ன குணங்கள் இருக்கிறதோ அந்த குணங்கள் அனைத்தும் கலைஞரிடம் இருந்தது.

இசைக்கு நல்ல குரல் வளம் தேவை. ஏறத்தாழ 80 ஆண்டுகள் தமிழர்களை ஆட்கொண்டது 'உடன்பிறப்பே'என்றழைத்த கலைஞரின் வெண்கலக்குரல் தான். இசை எங்கும் நிறைந்திருப்பதைப் போல, உலகம் முழுவதும் கலைஞர் எங்கும் நிறைந்திருக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ், வாகை சந்திரசேகர், உறுப்பினர் செயலர், மேயர் பிரியாராஜன், எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், மயிலை வேலு, காரம்பாக்கம் கணபதி, ஜெ.கருணாநிதி, கே.பி.சங்கர், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், பிரபாகரராஜா, துணைமேயர் மகேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, இளைய அருணா, மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயா, உள்பட கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News