கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்
- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
- நாகை மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இல்லாத காரணத்தால் கலெக்டரும் பங்கேற்கவில்லை.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி ஸ்தூபியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அருகே உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை நினைவு கூரும் புகைப்படங்களை பார்வையிட்டார்.
கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இந்நிலையில் கவர்னர் பங்கேற்றுள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.
நாகை மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இல்லாத காரணத்தால் கலெக்டரும் பங்கேற்கவில்லை.
நேற்று வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் கலெக்டர் பங்கேற்கவில்லை.
முன்னதாக, வேதாரண்யம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டினர். தமிழக அரசின் நலன் சார்ந்த கோப்புகளில் கையொப்பமிடாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும், ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா கைப்பாவையாக கவர்னர் செயல்படுவதை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ராஜாஜி பூங்கா எதிரே கருப்பு கொடி காட்டி கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், கறுப்புக்கொடி காட்டியவர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.