தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் முழு உருவச்சிலை: முதலமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2023-10-15 06:57 GMT   |   Update On 2023-10-15 06:57 GMT
  • சென்னையில் அப்துல் கலாமுக்கு சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
  • அப்துல் கலாமுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது முழு உருவச்சிலை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது.

சென்னை:

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் முழு உருவச்சிலை சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

சென்னையில் அப்துல் கலாமுக்கு சிலை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையின்போது ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி அப்துல் கலாமுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது முழு உருவச்சிலை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது.

இந்த சிலை திறப்பு விழா அவரது பிறந்தநாளான இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கு கூடியிருந்த மாணவ-மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர். மாணவிகள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, விருகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், பொதுப் பணித்துறை செயலாளர் சந்திரமோகன், செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தித்துறை இயக்குனர் மோகன் மற்றும் இளைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் எம்.எம்.ஆர்.மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News