தமிழ்நாடு

அரசு வேலை வாங்கி தருவதாக 100 பேரிடம் ரூ.4½ கோடியை சுருட்டிய தாய்-மகள்

Published On 2023-11-24 10:28 GMT   |   Update On 2023-11-24 10:28 GMT
  • ரேணுகா, சிபாமலீஸ்வரி மற்றும் அவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட ரெஜி ஞான பிரகாசம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
  • மோசடிக்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் போலி பணி நியமன ஆணைகள், விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை:

சென்னை மாதவரத்தை சேர்ந்த பழனி என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரேணுகா, அவரது மகள் சிபாமலீஸ்வரி ஆகியோர் அறிமுகமானார்கள்.

அப்போது அவரிடம் தங்களுக்கு மத்திய-மாநில அரசு துறைகளில் உயர் அதிகாரிகளை தெரியும் என்று கூறியுள்ளனர். 'ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா'வில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் பணத்தை ஏமாற்றி வாங்கி உள்ளனர். பின்னர் இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருவரும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ரேணுகா, சிபாமலீஸ்வரி இருவரும் மத்திய அரசு நிறுவனங்களான பாஸ்போர்ட் அலுவலகம், குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம், சுங்கத்துறை அலுவலகம் மற்றும் பல்வேறு வங்கிகள் அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.4½ கோடிக்கு மேல் மோசடியாக பணத்தை வாங்கி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

இதன்பேரில் ரேணுகா, சிபாமலீஸ்வரி மற்றும் அவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட ரெஜி ஞான பிரகாசம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் அரசு அதிகாரிகள் போல நடித்து நட்சத்திர ஓட்டல்களில் வைத்து நேர்முக தேர்வுகளை நடத்தி இருப்பது அம்பலமாகி உள்ளது.

இதையடுத்து கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடிக்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் போலி பணி நியமன ஆணைகள், விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் உதவி கமிஷனர் சுரேந்திரன், இன்ஸ்பெக்டர் கலாராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சிட்டிபாபு காவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் சிறப்பாக துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அவர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, "அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News