கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்
- தமிழக கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- தண்டனைகள் கடுமையாகும்போது தான் குற்றச்செயல்கள் குறையும்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
சென்னை கிண்டியிலுள்ள தமிழக கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை எதிர்க்கட்சிகள் பலமுறை சுட்டிக்காட்டியும் ஆளும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்ததின் விளைவாகதான் ஆளுனர் மாளிகை வாசலில் குண்டு வெடித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான உண்மை குற்றவாளியையும் அதற்கு காரணமாக மூளையாக இருந்து செயல்பட்ட சமூக விரோதியையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தண்டனைகள் கடுமையாகும் போது தான் குற்றச்செயல்கள் குறையும் என்பதை அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.