தமிழ்நாடு

மேளதாளங்கள் முழங்க காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுத்த நம்பெருமாள்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-08-03 12:37 GMT   |   Update On 2023-08-03 12:37 GMT
  • கோவிலில் இருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.
  • நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் காவிரியில் விடப்பட்டது.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி நதி பாயும் பகுதிகள் முழுவதும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கி வழிபடுவது வழக்கம். அதேபோல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள், காவிரித் தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் அம்மா மண்டபம் படித்துறையில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார்.

அவ்வகையில் ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள், காவிரி தாய்க்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4 மணிவரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதன்பின்னர் நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளங்கள் முழங்க காவிரி படித்துறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சீர்வரிசை பொருட்களை காவிரி தாய்க்கு வழங்கும் வகையில், காவிரி ஆற்றில் விடப்பட்டு, சீர்வரிசை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி தாயையும், நம்பெருமாளையும் தரிசனம் செய்தனர்.

பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

Tags:    

Similar News