தமிழ்நாடு

கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு விழா: பொதுமக்களுக்கு அனுமதி

Published On 2023-10-11 07:04 GMT   |   Update On 2023-10-11 07:04 GMT
  • நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
  • வெளிநாட்டு பிரஜைகளும் நவராத்திரி விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம்.

சென்னை:

சென்னை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை கவர்னர் மாளிகையில், 'நவராத்திரி கொலு-2023' அக்டோபர் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. கவர்னர் ஆர்.என். ரவி சென்னை கவர்னர் மாளிகையில் வருகிற 15 -ந்தேதி நவராத்திரி கொலு விழாவை தொடங்கி வைக்கிறார்.

கவர்னர் மாளிகையில் அக்டோபர் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டங்களில் பங்கேற்க பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்படஅனைவரும் மனதார வரவேற்கப்படுகிறார்கள்.

நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் அனுப்பப்படும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல், விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதற்கான சான்றாக அமையும்.

பார்வையாளர்கள், சென்னை கவர்னர் மாளிகையின் வாயில் எண். 2-ல் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்று (விண்ணப்பிக்கும்போது மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்யப்பட்ட) ஆவணத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும்.

வெளிநாட்டு பிரஜைகளும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் அசல் பாஸ்போர்ட் மட்டுமே அடையாள சான்றாக கருதப்படும். சென்னை கவர்னர் மாளிகை வளாகத்திற்குள் செல்பேசி மற்றும் புகைப்பட கருவிகள் அனுமதிக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News