தமிழ்நாடு

சம்பவம் குறித்து டி.எஸ்.பி.சங்கீதா விசாரணை நடத்திய காட்சி.

கால்களை கட்டிபோட்டு கொடுமை: தாயுடன் செல்ல மறுத்து ரோட்டில் அழுது புரண்ட 10 வயது சிறுமி

Published On 2023-05-11 11:54 GMT   |   Update On 2023-05-11 11:54 GMT
  • அதிகாரிகள் விடுதியில் தங்கி படிக்கிறாயா? என்று கேட்டபோது ஒப்புகொண்டு விடுதியில் தங்கி படிப்பதாக கூறினாள்.
  • காலில் ஊனமுற்ற விமலுக்கு அரசு உதவி கிடைக்க சேலம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி ஊராட்சி முள்ளிசெட்டிப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் விமல் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலை (28). இந்த தம்பதிக்கு 10 வயது மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.

விமல் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காலில் அடிபட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவி அஞ்சலை, கரும்பாலையில் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர்களது மூத்த மகள் தனது தந்தையும், தாயும் தன்னை அடித்து கொடுமை செய்வதாக கூறி, 10 வயது சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி அழுது கொண்டே பாட்டி வீடான பொட்டியபுரம் கிராமத்திற்கு வந்தாள். இதையறிந்த அப்பகுதி மக்கள் சிறுமியிடம் விசாரித்தபோது என்னை வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள், தந்தை குடித்து விட்டு வந்து கால்களை கட்டிபோட்டு அடித்து கொடுமைபடுத்துகிறார் என கண்ணீர் விட்டு கதறி அழுதாள். மேலும் தன்னை பள்ளிக்கு அனுப்பாமல் தந்தை அடிப்பதாகவும், தாய் வீட்டு வேலை செய்யக்கூறி அடித்து கொடுமை செய்வதாகவும், அதனால் தன்னை சேலத்தில் உள்ள பாட்டி வீட்டில் விடுமாறு கூறினாள்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, சிறுமியை தாயுடன் அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமி, தனது தாயை கட்டிபிடித்துக்கொண்டு அம்மா, நான் வீட்டுக்கு வரமாட்டேன் என கதறி அழுதார். அப்போது தாய் , மகளின் கைகளை பிடித்து வீட்டுக்கு அழைத்து செல்ல முற்பட்டபோது, சாலையில் உட்கார்ந்து சிறுமி அழுது புரண்டாள். இனிமேல் அடிக்கமாட்டேன் என தாய் அஞ்சலை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதை தொடர்ந்து சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், சமூக நலத்துறை அதிகாரிகள் முள்ளி செட்டிப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அங்கு சிறுமியின் தந்தை விமல் நடக்க முடியாமல் படுக்கையில் இருந்தார். அவர், தன்னால் சுவற்றை பிடித்து எழுந்து நிற்க முடியும், தனியாக நடக்க முடியாது, எனது மகளை அடிக்கவில்லை, மகள் 5-ம் வகுப்பு படித்து வருகிறார், தற்போது பள்ளி விடுமுறை என்பதால் குழந்தையை பார்த்துக்கொண்டு, வீட்டில் சிறு சிறு வேலைகள் செய்து வந்ததாக அதிகாரிகளிடம் கூறினார். மேலும், மகள் அவ்வப்போது இப்படித்தான் ஏதாவது கூறிக்கொண்டு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து விடுவாள் என தெரிவித்தார்.

இது பற்றி அதிகாரிகள், சிறுமியிடம் கேட்டபோது, அடிக்கடி என்னை அடிப்பார்கள், வீட்டு வேலை செய்வேன், தனது தாய்க்கு சாப்பாடு கொண்டு செல்வேன் என கூறினாள். அப்போது அதிகாரிகள் விடுதியில் தங்கி படிக்கிறாயா? என்று கேட்டபோது ஒப்புகொண்டு விடுதியில் தங்கி படிப்பதாக கூறினாள்.

இதையடுத்து பெற்றோரிடம் இனிமேல் சிறுமியை அடிக்க கூடாது, துன்புறுத்த கூடாது, சித்ரவதை செய்வதாக இனிமேல் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து, காலில் ஊனமுற்ற விமலுக்கு அரசு உதவி கிடைக்க சேலம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு வலியுறுத்தி சேலம் வந்து செல்ல ரூ.500 உதவியும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

தொடர்ந்து சிறுமியை ஓமலூர் நகரில் விடுதியுடன் கூடிய பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News