நீட் மருத்துவ மேற்படிப்பு இடங்கள்.. அண்ணாமலையின் 'அடேங்கப்பா' கணக்கு
- மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
- எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுகின்றனர்.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடையே பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து புதிய விளக்கம் அளித்துள்ளார். அதில், "இந்தியாவில் கடந்த ஆண்டு நீட் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகம். இவற்றில் பெரும்பாலானவை காலியாகவே உள்ளன."
"மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பில், மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் என்பதற்கு அர்த்தம், நீட் எழுதி இருந்தாலே போதும் என்பது தான். அவர்கள் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுகின்றனர்."
"எம்.பி.பி.எஸ். தேர்வே கட்-ஆஃப் தேர்வு தான். இதைத் தான் தற்போது பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் முழுமையாக நிரம்பும்."
"நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதலிலும், அடுத்தடுத்த மதிப்பெண்களை எடுத்தவர்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெறுவர். நீட் தேர்வு மதிப்பெண்ணிற்கு ஏற்ற வகையில், அவர்கள் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் சேர முடியும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.பி.எஸ். தேர்ச்சி போதுமானது என்பதால் தான் ஜூரோ பெர்சண்டைல் கொண்டுவரப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்களே 64 ஆயிரத்து 059 ஆகும். இதில் 4 ஆயிரத்து 400 இடங்கள் காலியாகவே இருந்தன. 2021-22 ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 60 ஆயிரத்து 202 ஆக இருந்தது. இதில் 3 ஆயிரத்து 744 இடங்கள் காலியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.