தமிழ்நாடு

நெல்லை காங்கிரஸ் தலைவர் எரித்துக்கொலை? - பரபரப்பை ஏற்படுத்தும் மரண வாக்குமூலம்

Published On 2024-05-04 07:06 GMT   |   Update On 2024-05-04 07:46 GMT
  • யாருக்கெல்லாம் தான் பணம் கொடுக்க வேண்டும் என்ற விபரத்தையும் ஜெயக்குமார் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது.
  • காணாமல் போன ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30-ந்தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் காண்ட்ராக்ட் தொழிலும் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் கருத்தையா ஜெப்ரின்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயக்குமார், வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதையடுத்து காணாமல் போன ஜெயக்குமாரை தேடி கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா உவரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயக்குமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவரது அறையில் கடிதங்கள் எதுவும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளாரா என்று போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு டைரியில் தனக்கு பணம் கொடுக்க வேண்டியவர்கள் குறித்த விபரத்தையும், யாருக்கெல்லாம் தான் பணம் கொடுக்க வேண்டும் என்ற விபரத்தையும் அவர் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் கையோடு எடுத்துச்சென்றுள்ளனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஜெயக்குமார் தனசிங், கடந்த 30-ந்தேதி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு மரண வாக்குமூலம் என்ற பெயரில் தனது காங்கிரஸ் கட்சி லெட்டர் பேடில் ஒரு புகார் மனு கைப்பட எழுதி அனுப்பி வைத்துள்ளார். அதில் தனக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள் தான் காரணம் என்று கூறி சிலரது பெயரை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த நபர்கள் தனக்கு லட்சக்கணக்கில் பணம் தரவேண்டும் எனவும், அவர்கள் ஏமாற்றியதன் காரணமாக, வெளியில் கடன் வாங்கி அதனை செலுத்த முடியாமல் திணறி வருவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த கடிதத்தில் அவர் யாருடைய பெயரை எல்லாம் குறிப்பிட்டுள்ளாரோ? அந்த நபர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

காணாமல் போன ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30-ந்தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.

மேலும் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News