தமிழ்நாடு

நியோ மேக்ஸ் பண மோசடி வழக்கு- 30 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Published On 2023-07-25 08:35 GMT   |   Update On 2023-07-25 08:35 GMT
  • மதுரை, நெல்லை, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான முதலீடுகளை நியோ மேக்ஸ் நிறுவனம் பெற்றது.
  • முதலீட்டு தொகையை திருப்பி தராததோடு, வட்டியும் வழங்கப்படவில்லை.

மதுரை:

மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏழை, எளியோரை குறி வைத்து அவர்களிடம் மூளைச்சலவை செய்து குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகள் கூறினர்.

இதனை நம்பிய ஏராளமானோர் பணத்தை டெபாசிட் செய்தனர். குறிப்பாக மதுரை, நெல்லை, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான முதலீடுகளை நியோ மேக்ஸ் நிறுவனம் பெற்றது. முதலில் வாக்குறுதி அளித்தபடி அதிக வட்டித்தொகையை கொடுத்தது.

அதன்பின்னர் முதலீட்டு தொகையை திருப்பி தராததோடு, வட்டியும் வழங்கப்படவில்லை. இதனால் பணத்தை செலுத்தியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கை தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பணத்தை ஏமாந்தவர்கள் துணிச்சலுடன் வந்து புகார் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஏராளமானானோர் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் வந்து புகார் அளித்தனர். இதையடுத்து நியோ மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் நியோ மேக்ஸ் தொடர்புடைய தென்மாவட்டங்களில் 30 இடங்களில் 2வது முறையாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுவரை பெறப்பட்ட 100 புகார் மனுக்களில் ரூ.22 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News