தமிழ்நாடு

கொடநாடு கொலை வழக்கில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது- ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

Published On 2022-09-03 03:16 GMT   |   Update On 2022-09-03 03:16 GMT
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
  • மூடி மறைக்கப்பட்ட விபத்துகள் குறித்தும், விபத்தில் பலியானவர்கள் குறித்தும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.

சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கும்பல் நுழைந்து காவலாளியை கொலை செய்து, பொருட்கள், ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரளாவை சேர்ந்த மனோஜ், சயான் உள்பட பலரை கைது செய்தனர். பின்னர் புலன் விசாரணை முடித்து, கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்த வழக்கை ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் மீண்டும் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் மனோஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, "கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே மூடி மறைக்கப்பட்ட விபத்துகள் குறித்தும், விபத்தில் பலியானவர்கள் குறித்தும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் எதுவும் செய்யக்கூடாது" என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

Similar News