தமிழ்நாடு

என்.ஐ.ஏ. சோதனையையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

Published On 2024-05-21 05:30 GMT   |   Update On 2024-05-21 06:24 GMT
  • என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள 2 டாக்டர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
  • சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி கொண்டனர்.

கோவை:

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1-ந் தேதி 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கினை பெங்களூரு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப், அப்துல் மதீன் தாகா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் சென்னை, சிவமொக்கா, பெங்களூரு போன்ற நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அதிரடி சோதனையும் மேற்கொண்டனர். தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள 2 டாக்டர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

கோவை சாய்பாபா காலனி பெரிய கருப்பண்ண கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜாபர் இக்பால். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை 6 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கர்நாடக போலீசார் காரில் வந்தனர்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் நுழைவு வாயில், கதவுகள் அனைத்தையும் யாரும் உள்ளே நுழையாதவாறு அடைத்தனர். தொடர்ந்து ஜாபர் இக்பாலின் வீடு முழுவதும் ஒவ்வொரு அறையாக, அங்குலம் அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

வீட்டில் இருந்த ஜாபர் இக்பாலிடமும் விசாரித்தனர். சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி கொண்டனர்.

இதேபோல் அவரது வீட்டின் அருகே உள்ள அவரது உறவினரான டாக்டர் நயன் சாதிக்கின் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது 10.20 மணிக்கு முடிவடைந்தது. சோதனையின் முடிவில் 2 பேரின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. செல்போனில் உள்ள தரவுகளை ஆராய்ந்து சோதனை செய்து விட்டு திரும்ப ஒப்படைப்பதாக கூறி விட்டு சென்றனர். மேலும் அவர்கள் 2 பேரையும் வருகிற 23-ந் தேதி பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. அலுவ லகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி விட்டு சென்றுள்ளனர்.

ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய இடங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இங்கு சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News