தமிழ்நாடு

என்.ஐ.ஏ. டி.ஐ.ஜி. வந்தனா

என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 பேர் கோவை வருகை- டி.ஐ.ஜி. வந்தனா தலைமையில் விசாரணை

Published On 2022-10-28 07:45 GMT   |   Update On 2022-10-28 07:45 GMT
  • கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இறந்த முபின் உள்பட 7 பேர் மீது புதிதாக வழக்கு போடப்பட்டுள்ளது.
  • டி.ஐ.ஜி. வந்தனா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கோவையிலேயே முகாமிட்டு, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர்.

கோவை:

கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் உயிரிழந்தார். இதுதொடர்பாக 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கை தமிழக அரசு, என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது.

அதனை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இறந்த முபின் உள்பட 7 பேர் மீது புதிதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120(பி) கூட்டுச்சதி, 153(ஏ) மத உணர்ச்சியை தூண்டி விட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, யு.ஏ.பி.ஏ.(உபா) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பிரிவு 16 மற்றும் 17 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் தான் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது. முதல் வழக்காக கோவை கார் வெடிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதும், சென்னை, கேரளாவில் இருந்து தென்மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி. வந்தனா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கோவை வந்தனர்.

அவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து கார் வெடிப்பு சம்பவம் குறித்து அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த அனைத்து தகவல்களையும் கேட்டு பெற்றனர்.

தொடர்ந்து டி.ஐ.ஜி. வந்தனா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கோவையிலேயே முகாமிட்டு, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தையும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது கைதானவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றுடன் அவர்களின் போலீஸ் காவல் முடிவடைகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

போலீஸ் காவல் முடிந்ததும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளிலும் டி.ஐ.ஜி. வந்தனா தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News