தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

Published On 2024-10-13 04:18 GMT   |   Update On 2024-10-13 04:18 GMT
  • தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.
  • தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

சென்னை:

தென்மேற்கு பருவகாற்று தென் மாநிலங்களில் விலகும்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும். இதன் காரணமாக தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.

அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் இறுதி வரை இந்த பருவ காலம் நீடிக்கும். வடகிழக்கு பருவமழை எனப்படும் இந்த காலக்கட்டத்தில் நல்ல மழை பொழிவும் இருக்கும். மிக கனத்த மழை பெய்து பாதிப்புகளையும் உருவாக்கும்.

தற்போது அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக வலுவடைந்து வருகிறது. அதே நேரம் வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்பும் உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 18-ந் தேதி வரை பரவலாக நல்ல மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

இன்று மாலை முதல் கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் மழை பெய்ய தொடங்கும். நாளை (திங்கள்) டெல்டா மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யக் கூடும்.

எனவே இந்த பகுதிகளுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் 6 முதல் 11 செ.மீ. மழை வரை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது.

வருகிற 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கடலூர் தொடங்கி நெல்லூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யலாம். எனவே ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் 200 மி.மீட்டர் வரை மழை பெய்யலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்று (ஞாயிறு) திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதிகளிலும் 11 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எங்கெங்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது? எங்கெங்கு மின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்பதை கண்காணிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 10 ஆயிரம் தன்னார்வலர்களும், அரசுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட தயாராக இருக்கிறார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

Tags:    

Similar News