காங்கிரசில் செயல்படாத மாநில நிர்வாகிகள் கணக்கெடுப்பு- செல்வப்பெருந்தகை அதிரடி
- பலர் கவுரவத்துக்காக பதவியை வாங்கி வைத்திருப்பதாகவும், சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
- சரியாக செயல்படாதவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அவ்வப்போது புது புது நடவடிக்கைகளை எடுத்துதான் பார்க்கிறார்கள்.
பதவிகள் கிடைத்தால் நன்றாக உழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள். துணைத் தலைவராக 52 பேர், பொதுச்செயலாளர்களாக 52 பேர், செயலாளர்களாக 120 பேர் நியமிக்கப்பட்டார்கள்.
250-க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக பதவி கொடுக்கப்பட்டது. இவ்வளவு பதவிகள் கொடுத்தும் கட்சி குறிப்பிடத்தக்க அளவு பலம் பெறவில்லை என்ற குறைபாடு உள்ளது. இதற்கு காரணம் என்ன என்று மாநில தலைமை நடத்திய ஆய்வில் பலர் கவுரவத்துக்காக பதவியை வாங்கி வைத்திருப்பதாகவும், சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே செயல்படாமல் இருப்பவர்களை கணக்கெடுக்கும்படி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநில நிர்வாகிகள் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
சரியாக செயல்படாத அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளார். பழைய நிர்வாகிகள் நீக்கப்படுவதற்கான காரணத்தையும் அவர்களுக்கு பதிலாக அந்த அந்த மாவட்ட நிர்வாகிகளின் கருத்து கேட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதையும் மேலிடத்துக்கு தெரிவித்து ஒப்புதல் பெற முடிவு செய்துள்ளார்கள். இவ்வாறு நிர்வாகிகள் கணக்கெடுக்கப்படுவது பலரது வயிற்றில் புளியை கரைத்துள்ளது.