தமிழ்நாடு (Tamil Nadu)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியர் உடல் உறுப்புகள் தானம்

Published On 2024-10-13 06:00 GMT   |   Update On 2024-10-13 06:01 GMT
  • கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகள் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர்.
  • டீன் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி நயினார் (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இவர் திசையன்விளையில் உள்ள டிம்பர் டிப்போவில் பணியாற்றி வந்தார். கடந்த 10-ந்தேதி திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அவர் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மந்திரமூர்த்தி நயினார் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகள் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர்.

இதையடுத்து நேற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. பின்னர் உடற்கூறாய்வு செய்யப்பட்டு மந்திரமூர்த்தி நயினார் உடல் நெல்லை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை டீன் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News