கொட்டித்தீர்க்கப் போகும் கனமழை.. தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை
- வடகிழக்கு பருவமழை இயல்பை வட அதிகளவில் பெய்ய வாய்ப்பு.
- தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
தென்மேற்கு பருவகாற்று தென் மாநிலங்களில் விலகும்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும். இதன் காரணமாக தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் இறுதி வரை இந்த பருவ காலம் நீடிக்கும்.
வடகிழக்கு பருவமழை எனப்படும் இந்த காலக்கட்டத்தில் நல்ல மழை பொழிவும் இருக்கும். மிக கனத்த மழை பெய்து பாதிப்புகளையும் உருவாக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை வட அதிகளவில் பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
கனமழையின் போது மீட்பு பணிகளில் ஈடுபட மொத்தம் 300 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒரு குழுக்கு 30 பேர் வீதம் மொத்தம் பத்து குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவு வளாகத்தில் அவசர கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ரப்பர் படகுகள் உள்பட மீட்பு கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதோடு தமிழ்நாடு மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேரடி தொடர்பில் உள்ளனர்.