தமிழ்நாடு (Tamil Nadu)

ஜார்ஜ்கோட்டை போல் மேடை அமைக்கும் பணி- 5 ஆண்டுகள் கொடியை நிரந்தரமாக பறக்க விட திட்டம்

Published On 2024-10-13 06:43 GMT   |   Update On 2024-10-13 06:43 GMT
  • மாநாட்டு திடல் முழுவதும் மின் விளக்குகள் அமைப்பதற்காக 3 ஆயிரம் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
  • மாநாட்டின் நுழைவு வாயில் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்ற உள்ளார்.

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கொடியை நிரந்தரமாக பறக்கவிட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து உள்ளார். இதற்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது மேடை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதையடுத்து அதன் உள்புறம் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. நேற்று மாநாட்டு திடலில் முளைத்துள்ள செடிகள் மீண்டும் முளைக்காத வகையில் அவற்றின் மீது களைக்கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்டன. மாநாட்டு திடல் முழுவதும் மின் விளக்குகள் அமைப்பதற்காக 3 ஆயிரம் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு செல்லாத வகையில் அங்கு இரும்பு தகடுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அங்குள்ள திறந்த நிலையில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் பெரிய இரும்பு கர்டர்கள் அமைத்து அதை முழுமையாக மூடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் முகப்பு வாயில் ஜார்ஜ் கோட்டை போன்று பிரமாண்ட வடிவில் அமைக்கப்பட உள்ளது.



மாநாட்டில் வாகனம் நிறுத்தும் இடத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரகுமார் குப்தா ஆய்வு செய்த காட்சி.


அவ்வப்போது மழை பெய்து இடையூறு ஏற்படுத்தினாலும் மாநாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாநாட்டின் நுழைவு வாயில் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்ற உள்ளார். இதற்காக கொடிக்கம்பம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மாநாடு முடிந்தாலும் அந்த கம்பத்தில் கொடி நிரந்தரமாக பறந்திட வி.சாலையை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான அந்த நிலம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த தனியாருக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தும் இடத்தை விழுப்புரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர குமார் குப்தா ஆய்வு செய்தார். கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் எந்த இடத்தின் வழியாக உள்ளே நுழைந்து, எங்கே எந்தெந்த வாகனங்கள் நிற்கிறது என்ற விவரத்தை கட்சியின் வக்கீல் அரவிந்தனிடம் கேட்டறிந்தார்.

விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், த.வெ.க. மாவட்டத் துணைத் தலைவர் வடிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News