ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி-பேரணி: கலெக்டர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார்
- ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
- அனைவரும் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்றனர்.
காஞ்சிபுரம்:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப். 1-ந் தேதி முதல் செப். 30-ந் தேதி வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக முதல் வாரத்தில் பிரத்யேக தாய்ப்பால் புகட்டுதல் மற்றும் இணை உணவு அளித்தல், இரண்டாவது வாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் மற்றும் ஊட்டச்சத்து, முன்பருவக் கல்வி, யோகா, உள்ளூர் உணவு போன்ற ஆயுஷ் நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின் பற்றுதல் நடைபெறுகிறது.
மூன்றாவது வாரத்தில் என் மனம் என் நாடு மற்றும் பழங்குடியினரை மையமாகக் கொண்டு ஊட்டச்சத்து உணர்திறன் நிகழ்ச்சியில் நான்காவது வாரத்தில் ரத்தசோகை பரிசோதனை, சிகிச்சை, ஒட்டுமொத்த ஊட்டச் சத்து நடவடிக்கைகள் மற்றும் சமுதாய தோட்டங்கள் அமைத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் மற்ற துறைகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகின்றன.
ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கி ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி வாசித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைவரும் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) க.சங்கீதா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார திட்ட உதவியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.