ராசிபுரம் அருகே பண்ணையில் 20 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பு- அழித்து புதைக்க அதிகாரிகள் உத்தரவு
- பண்ணையில் வளர்க்கப்பட்ட 2 பன்றிகள் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உயிரிழந்தது.
- ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்கா வைரஸ் தாக்கி பன்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் என்ற இடத்தில் ராஜாமணி என்பவர் கடந்த சில வருடங்களாக வெண்பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது பண்ணையில் வளர்க்கப்பட்ட 2 பன்றிகள் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உயிரிழந்தது. இதனை தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு சென்ற மருத்துவ குழுவினர் அவற்றின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்கா வைரஸ் தாக்கி பன்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த பண்ணையை இன்று கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு குட்டிகள் உட்பட 20 பன்றிகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்துள்ளதால், அவற்றை 15 அடி ஆழம் குழி தோண்டி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
மேலும் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் டாக்டர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் பண்ணையில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் அவற்றை அழைக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டு உள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கோ, மாடு, ஆடு போன்ற வளர்ப்பு கால்நடைகளுக்கோ பரவாது. ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும். எனவே விவசாயிகள் பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை
மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றிச் செல்லும்பொழுது அதுகுறித்து தீவிர விசாரணை செய்யவும், நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து பன்றிகளுக்கும், நோய் தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்குப்பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியதாகும்.
இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாதலால் தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவை கொண்ட நடைபாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், ஓட்டல் மற்றும் விடுதிகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை பன்றிக்கு தீவனமாக வழங்காமல் இருப்பது மற்றும் அந்நியர்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.