விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தென்னங்கன்றை கழிவறையில் வைத்த அதிகாரிகள்- பயனாளிகள் வேதனை
- வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் நலிந்த ஏழைப் பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளது.
- அதிகாரிகள் அலட்சியமாக தென்னங்கன்றுகளை வைத்து இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருவள்ளூர்:
பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 43 ஊராட்சிகள் உள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் நலிந்த ஏழைப் பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தென்னை கன்றுகளை முறையாக பாதுகாக்காமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் வைத்து உள்ளனர்.
இதனை பார்க்கும் விவசாயிகளும், பயனாளிகளும் மிகவும் மனவேதனை அடைந்து வருகிறார்கள். அதிகாரிகள் அலட்சியமாக தென்னங்கன்றுகளை வைத்து இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகளை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.