தமிழ்நாடு

மனுக்களை கட்டி தலையில் வைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அய்யாசாமியை படத்தில் காணலாம்.

கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 33 முறை அளித்த மனுக்களை கட்டு கட்டி கொண்டு வந்த முதியவர்

Published On 2023-05-22 08:44 GMT   |   Update On 2023-05-22 08:44 GMT
  • தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
  • நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.

இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.

இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News