உதகை மலர் கண்காட்சி மே 26-ம் தேதி வரை நீட்டிப்பு- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
- ஊட்டியில் கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
- சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.
குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் மே 10 அன்று தொடங்கியது.
மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 2 லட்சம் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேல்டு, பல்வேறு அலங்கார வளைவுகள், மலர் அலங்காரங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த மலர் கண்காட்சியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்தனர்.
இன்றுடன் மலர் கண்காட்சி முடிவடைந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கண்காட்சியை மேலும் 6 நாட்களுக்கு நீட்டித்து தோட்டக்கலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதனபடி 126வது மலர் கண்காட்சி மே 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.