தண்டவாளத்தில் மண் அரிப்பு: மலை ரெயில் இன்று ரத்து
- பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டது.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து 155 பயணிகளுடன் இன்று புறப்பட்ட மலைரெயில், கல்லார் பகுதிக்கு முன்பாக சென்றபோது, மண் அரிப்பு ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் நிறுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் விரும்புவார்கள்.
தற்போது மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மலைப்பாதைகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 3-ந் தேதி இரவு பெய்த மழைக்கு, மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைரெயில் பாதையில் மரங்கள், மண்சரிவு ஏற்பட்டதால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மலைரெயில் ரத்து செய்யப்பட்டது.
பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் நீலகிரி, கோவை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால், குன்னூர் மலைரெயில் பாதையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன.
இதுதவிர நேற்றிரவு திடீரென கல்லார் பகுதியில் உள்ள மலைரெயில் தண்டாவள பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் வடிந்த பின்னர் அந்த பகுதியில் மண்அரிப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல மேட்டுப்பாளையத்தில் இருந்து 155 பயணிகளுடன் புறப்பட்ட மலைரெயில், கல்லார் பகுதிக்கு முன்பாக சென்றபோது, மண் அரிப்பு ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் மலைரெயில் நிறுத்தப்பட்டது.
பின் அங்கிருந்து மீண்டு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் வந்து, சுற்றுலா பயணிகளுக்கு அவர்களது முன்பதிவு பணம் திருப்பி கொடுக்கப்பட்டு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தண்டவாள பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக இன்று ஒரு நாள் மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.