தமிழ்நாடு

குன்னூர்-ஊட்டி இடையே இன்று மலை ரெயில் போக்குவரத்து ரத்து

Published On 2024-07-28 08:52 GMT   |   Update On 2024-07-28 08:52 GMT
  • அருவங்காடு வரை சென்ற மலை ரெயில் மீண்டும் வந்த வழியாக குன்னூருக்கு திரும்பியது.
  • தண்டவாளங்களில் கிடக்கும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அருவங்காடு:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதுடன் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தும் பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் குன்னூர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்று வீசியது. இதில் குன்னூர்-ஊட்டி மலைரெயில் வழித்தடத்தில் அருவங்காடு, கேத்தி ஆகிய பகுதிகளில் 3 இடங்களில் மரங்கள் தண்டவாளத்தில் விழுந்து கிடக்கிறது. இதனால் அருவங்காடு வரை சென்ற மலை ரெயில் மீண்டும் வந்த வழியாக குன்னூருக்கு திரும்பியது.

தொடர்ந்து மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள், ஊட்டிக்கு அரசு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த மலைரெயில் குன்னூர் வரை மட்டும் இயக்கப்பட்டது.

மலை ரெயில்பாதை வழித்தடத்தில் தண்டவாளங்களில் கிடக்கும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனவே குன்னூர்-ஊட்டி இடையே இன்று ஒரு நாள் மட்டும் மலை ரெயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News