தமிழ்நாடு (Tamil Nadu)

வன்னிகாசூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி- பழனி முருகன் கோவிலில் இன்று நடையடைப்பு

Published On 2024-10-12 06:12 GMT   |   Update On 2024-10-12 06:12 GMT
  • பழனி கோவிலில் இருந்து பராசக்தி வேல் கொண்டு வரப்படும்.
  • வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

பழனி:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி யம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 3ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

இதற்காக பழனி கோவிலில் இருந்து பராசக்தி வேல் கொண்டு வரப்படும். எனவே பக்தர்கள் காலை 11 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து கோவிலில் மதியம் 12 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்ஷை பூஜையும் நடக்கிறது. அதனை தொடர்ந்து மதியம் 3.15 மணிக்கு மலைக்கோவிலில் நடை அடைக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து பராசக்தி வேல் புறப்பாடாகி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும். அங்கிருந்து தங்ககுதிரை வாகனத்தில் முத்துக் குமாரசாமி புறப்பாடாகி கோதைமங்களம் ஜோதீஸ்வரர் கோவிலை வந்தடைவார். அங்கு வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

மேலும் சிவானந்த புலிப்பாணி பாத்திரசாமிகள் அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனை தொடர்ந்து சுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலை வந்தடையும். பராசக்திவேல் முருகன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். அதன் பின்பு அங்கு அர்த்த சாம பூஜைகள் நடைபெறும்.

நாளை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News