தமிழ்நாடு

தசரா பக்தர்கள் தங்கி இருந்த ஓலை குடிசையில் திடீர் தீ- 9 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

Published On 2024-10-12 06:39 GMT   |   Update On 2024-10-12 06:39 GMT
  • இன்று அதிகாலை பக்தர்கள் அனைவரும் குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
  • ஓலை குடிசையில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு, காயம் ஆகியவை யாருக்கும் ஏற்படவில்லை.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தும், பல்வேறு வேடங்கள் அணிந்தும் கோவிலுக்கு செல்வார்கள். அதன்படி நெல்லை மாவட்டத்தில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் இந்த ஆண்டும் வேடங்கள் அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

அதன்படி வண்ணார்பேட்டையை சேர்ந்த தாமோதரன் என்பவர் பாளை அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களுடன் தசராவையொட்டி மாலை அணிந்து விரதம் இருந்தனர். இதன் காரணமாக அந்த தசரா பக்தர்கள் குழுவினர் அண்ணா நகர் பகுதியில் ஒரு ஓலை குடிசை அமைத்து அதில் தங்கியிருந்தனர். நேற்று இரவு தங்களது மோட்டார் சைக்கிள்களை அந்த ஓலை குடிசையில் நிறுத்திவிட்டு, அவர்களும் அந்த ஓலை குடிசையில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை பக்தர்கள் அனைவரும் குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு உணவு சமைத்த குழுவினர் மட்டுமே அந்த ஓலை குடிசையில் இருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் ஓலை குடிசையில் வைக்கப்பட்டிருந்த விளக்கு ஒன்று கவிழ்ந்து விழுந்துள்ளது. இதனால் தீப்பிடித்துள்ளது.

பின்னர் சிறிது நேரத்திலேயே தீ பரவி எதிர்பாராத விதமாக ஓலை குடிசை முழுவதும் தீ பரவியது. இதனை பார்த்து சமையல் குழுவினர் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர். உடனடியாக பாளை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து ஐகிரவுண்டு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து தண்ணீரை விரைவாக பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓலை குடிசையில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு, காயம் ஆகியவை யாருக்கும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் குடிசையில் நிறுத்தப்பட்டிருந்த பக்தர்களின் 9 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகி முற்றிலும் நாசமானது. இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News