பரமத்திவேலூரில் ஆடி பண்டிகை கோலாகலம்: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் பரவசம்
- அருள் வந்த பூசாரி தேங்காய்களை பக்தர்களின் தலையில் உடைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே உள்ள காவேரி ஆற்றில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
கூடச்சேரி, பில்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் கோவில்களில் இருந்த பழைய ஆயுதங்களை காவிரி ஆற்றுக்கு கொண்டு வந்து அதனை காவிரியில் சுத்தம் செய்தனர். பின்னர் ஆயுதங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
அதனை தொடர்ந்து பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அருள் வந்த பூசாரி தேங்காய்களை பக்தர்களின் தலையில் உடைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணியளவில் வேலூர் சோழன் பாய்ஸ் ஏ. இயக்க மீனவர் சங்கம் சார்பில் பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் 26-ம் ஆண்டு தொடர் பரிசல் போட்டி நடைபெற்றது.
இதில், பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி கரையில் இருந்து மறுகரையில் உள்ள கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி வரை சென்று மீண்டும் காசி விஸ்வநாதர் கோவில் பகுதியை வந்தடைந்தது.
இதில் முதல் பரிசை பெற்ற பரமத்திவேலூரைச் சேர்ந்த ராஜாவுக்கு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு பெற்ற கணேசனுக்கு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு பெற்ற விஸ்வாவுக்கு ரூ.5 ஆயிரம், 4-ம் பரிசு பெற்ற முட்டி என்கிற கணேசனுக்கு ரூ. 3 ஆயிரமும் வழங்கப்பட்டது.
பரிசு தொகையினை டி.எஸ்.பி ராஜமுரளி வழங்கி பாராட்டினார்.
அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக காசி விஸ்வநாதர் கோவிலில் மோட்ச தீபத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பரிசல் மூலம் காவிரி ஆற்றின் மத்திய பகுதிக்கு சென்று விடப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம், நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.