அசோக்நகர் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வரிசையில் காத்து நின்ற பெற்றோர்கள்
- ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள்.
- 6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.
சென்னை:
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. வருகிற 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முதல் வகுப்பு, 6-ம் வகுப்புகளில் அதிகளவில் சேர்த்து வருகின்றனர். 5 நாட்களில் 60 ஆயிரம் பேர் சேர்ந்து உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் பெற்றோர் குவிகிறார்கள். இந்த பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதால் எவ்வித செலவும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர்.
குறிப்பாக 6-ம் வகுப்பில் சேர்க்க அலைமோதுகிறார்கள். விண்ணப்பம் கொடுக்க தொடங்கிய முதல் நாளில் பெற்றோர் குவியத் தொடங்கினர்.
ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள். விண்ணப்ம் வாங் குவதற்கு நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.
இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், அசோக் நகர் மேல் நிலை பள்ளியில் குறிப்பாக 6-ம் வகுப்பில் அதிக மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம். அப் பகுதியில் உள்ள மெட்ரிக் குலேஷன், தனியார் பள்ளிகளில் படிப்பை பாதியில் விட்டு விட்டு மாணவர்கள் இங்கு சேருகின்றனர் என்றார்.
இந்த பள்ளியில் 4500 மாணவர்கள் படித்து வருகின்றனர். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவிகள் முழு அளவில் தேர்ச்சி பெறுவதால் பெற்றோர்கள் இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வமாக உள்ளனர்.
அரசு பள்ளிகள் என்றாலே தரம் இருக்காது, கட்டமைப்பு வசதி இருக்காது என்ற பொதுவான பார்வைக்கு மத்தியில் அசோக்நகர் அரசு மகளிர் பள்ளி மட்டும் தனித்துவமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் அலைந்து திரிகிறார்கள்.