காசு கொடுக்காமல் போட்டியிட்ட எம்பியை பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறோம் - மதன் கௌரி
- எம்.பி. சு வெங்கடேசன், கேரள எம்.பி A.A. ரஹீம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ். கார்த்தி மற்றும் சில கம்யூனிச தலைவர்கள் கலந்து கொண்டனர்
- கௌரவக் கொலைகள் என்று கூறப்பட்டு வந்த சாதிய கொலைகளை, ஆணவக் கொலைகள் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டோம்.
மதுரையில் நேற்று ஜூலை 14, 2024 ஆம் தேதி மாலை 4 மணியளவில் காந்தி அருங்காட்சியகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு(DYFI) மாநில குழு சார்பாக நடத்தப்பட்ட 'காதலைப் போற்றுவோம்'என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மதுரை எம்.பி. சு வெங்கடேசன் உள்ளிட்ட பல கம்யூனிச தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்னிந்தியாவின் பிரபல யூடியூபர் மதன் கௌரி ஆணவக் கொலை உள்ளிட்ட பல காரசாரமான விஷயங்களை உணர்ச்சி பொங்க பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய மதன் கௌரி, ஓட்டுப் போட்டாலும் போடாமல் விட்டாலும், நியாய தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் கம்யினிஸ்டுகள் என்று புகழாரம் கூறினார். மேலும் மதுரையின் ஒரு சிறப்பம்சமாக காசு கொடுக்காமல் தேர்தலில் நின்ற எம்பியை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறோம் என்று கூறினார். நாம் தெய்வமாக வணங்கும் மீனாட்சி அம்மன் கூட இமயமலை சென்று அங்கு ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்ததாகவும், மீனாட்சி அம்மன் அப்போதே சாதியை எதிர்த்து உள்ளார் என்பதையே காட்டுவதவாத தெரிவித்தார்.
கௌரவக் கொலைகள் என்று கூறப்பட்டு வந்த சாதிய கொலைகளை, ஆணவக் கொலைகள் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டோம். ஆனால் இன்னும் ஆங்கிலத்தில் 'ஹானர் கில்லிங்' என்றே கூறப்பட்டு வருகிறது, அதில் பெருமை எதுவும் இல்லை. என்னுடைய சேனலில் ஆணவக் கொலைகளை நான் குறிப்பிடும் போது இனி 'அடாசிட்டி கில்லிங்' என்றே கூறுவேன், அது ஆணவக் கொலைகள் தான், கௌரவக் கொலைகள் கிடையாது என்று உணர்ச்சி பொங்க பேசினார்.