ரெயில் விபத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்பு: மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர்
- ரெயில் விபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
திருவள்ளூர்:
கவரப்பேட்டை அருகே பயணிகள் ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரெயில் விபத்து நடந்த இடத்தை ஆய்வுசெய்த மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி வட்டத்தில் உள்ள கவரப்பேட்டையில் நேற்று இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் செல்லக்கூடிய பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது. அதில் 6 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் 1,300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியானது.
விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடனேயே மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை இணைந்து சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பயணிகள் ரெயிலில் இருந்து ஒவ்வொருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதில் 19 பேருக்கும் மட்டும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் தீவிர காயம் உள்ளவர்களுக்கு ஸ்டாலின்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான காயம் உள்ளவர்களுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தது.
உள்ளூர் மக்கள் உதவியுடன் துரிதமாக மீட்பு பணிகள் நடைபெற்றது. ரெயில் பயணிகள் தங்குவதற்கு 3 மண்டபங்களில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்தில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.